Sunday, October 30, 2016

கலைஞர் எனும் கலைஞன் - 16 இருவர் உள்ளம்



இருவர் உள்ளம் - 21

படம் வெளியான நாள் 29-3-1963

இயக்கம் எல் வி பிரசாத்

எழுத்தாளர் லட்சுமி எழுதிய பெண்மனம் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம்.

திரைக்கதை, வசனம் கலைஞர்

சிவாஜி, சரோஜா தேவி,எம் ஆர் ராதா,ரங்காராவ் ஆகியோர் நடித்திருந்தனர்

சிவாஜி ஒரு பிளேபாய்.பணக்காரர்.பல பெண்களுடன் உறவு வைத்திருப்பர்.

அப்படிப்பட்டவர் வாழ்வில் ,ஒருநாள், ஏழை டீச்சர் சரோஜா தேவியைப் பார்க்கிறார் .அவளை மணக்க விரும்புகிறார்.சரோஜாதேவியும் ஆசையுடன் மணப்பார் என எதிர் பார்க்கிறார்.ஆனால் இவர் இசையவில்லை

தன் பணத்தால் , அவர் பெற்றோர்களிடம் பேசி  அவரையே மணக்கிறார் சிவாஜி

திருமணத்திற்குப் பின் அவர் நல்லவராக மாறினாலும், டீச்சர் அதை ஏற்கவில்லை.

இதனிடையே, சிவாஜி மாறியதையும், த்ன்னை மட்டுமே விரும்புவதையும் சரோஜா தேவி அறியும் போது, சிவாஜி ஒரு கொலை பழியில் சிக்குகிறார்.

அவர் மீண்டு வருவதும், இருவரும் ஒன்று சேருவதுமே மீதிக் கதை

இப்படத்தில் எம் ஆர் ராதா..ஒரு மாறுபட்ட நகைச்சுவை வேடத்தில் வந்து, டி பி முத்துலட்சுமியுடன் சேர்ந்து கலக்குவார்

இப்படத்தின் சில காட்சிகளுடன், மீண்டும் சிவாஜி, சரோஜாதேவியை வயதானவர்களாக சமீபத்தில் வந்த ஒன்ஸ்மோர் படத்தில் காட்ட்ப்பட்டது

கே வி மகாதேவன் இசையில் அனைத்துப் பாடல்களும் தேன்.பாடலாசிரியர் கவியரசு கண்ணதாசன்

பறவைகள் பலவிதம்
கண்ணெதிரே தோன்றினாள்
இதய வீணை தூங்கும் போது
நதி எங்கே போகிரது
அழகு சிரிக்கிறது
ஏன் அழுதாய் ஏன் அழுதாய்

மேற்சொன்ன பாடல்களை டி எம் சௌந்தரராஜனும்,சுசீலாவும் பாடினர்
ஏ எல் ராகவன் , ராதாவிற்காக பாடிய "புத்தி சிகாமணி" பாடலும் சிறப்பு

தனது சாதாரண குடும்பப்பாங்கான வசனங்கள் மூலமும் கலைஞர்  வெற்றி பெற்றார்

கலைஞர் எனும் கலைஞன் - 15 தாயில்லாப் பிள்ளை



தாயில்லாப் பிள்ளை - 20

கலைஞரின் கதை வசனத்தில், எல் வி பிரசாத் இயக்கத்தில்..கல்யாண்குமார்,பாலையா நடித்து வந்த படம் தாயில்லாப் பிள்ளை.

வெளியான நாள்  18-8-1961..

பதஞ்சலி சாஸ்திரி மிகவும் ஆசாரமானவர்.இவருக்கு குழ்ந்தை பாக்கியம் இல்லை.இவர் மனைவி இருமுறை கருத்தரித்தும், கரு கலைந்துவிடுகிறது.

மனைவியின் சகோதரர் ஒரு மருத்துவர்.ஆனால், சாஸ்திரிக்கும் அவருக்கும் உறவு சுமுகமாய் இல்லை

இந்நிலையில், சாஸ்திரியின் மனைவி மீண்டும் கருத்தரிக்கிறாள்.அவள்..தன் சகோதரன் மருத்துவ மனைக்குச் சென்று குழந்தை பெறுகிறாள்.ஆனால்..அங்கு அப்போது பிறந்த மற்றொரு குழந்தையின் தாய் இறக்க..பிறந்த குழந்தையையும் அவள் தத்தெடுக்கிறாள்.

ஆனால், இதனால் ஏற்பட்ட குழப்பத்தில்..எது தன் குழந்தை..எது தத்துக் குழந்தை  என சாஸ்திரிக்கு தெரியவில்லை.

தத்துக் குழந்தை இவர் குழந்தையாகவும், இவர் குழந்தை ஒரு ரிக்க்ஷாக்காரனாகவுமாகிறது

ஆனால்..அந்த இருவரும்  சாதி, மதங்களை உடைத்தெறிகின்றனர்

கே வி மகாதேவன் இசையில் சூலமங்களம் ராஜலட்சுமி பாடிய "சின்னச் சின்ன ஊரணியாம்".ஏ எல் ராகவன் பாடிய "காலம் மாறுது".ஏ எல் ராகவன் பாடிய "கடவுளும் நானும் ஒரு ஜாதி".பி பி ஸ்ரீனிவாஸ் ,ஜமுனாராணி பாணி பாடிய படிக்க வேண்டும் புதிய பாடம் பாடலும் இனிமை

கலைஞர் எனும் கலைஞன் - 13 எல்லோரும் இந்நாட்டு மன்னர்



எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 18


1960 ஆண்டு வந்த மற்றொரு திரைப்படம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்.

கசை, வசனம் கலைஞர்   ..(மூலக்கதை- மா.லட்சுமணன்)

டி பிரகாஷ்ராவ் இயக்கம்

உழைப்போருக்கு வாழ்வு
உரிமையுடையோர்க்கு நாடு - என
நல்லாரும், அறிவில் வல்லாரும்
வகுத்திட்ட தத்துவமே
எல்லோரும் இந்நாட்டு மன்னன்

இதுவே இப்படத்தின் மையக்கரு

ஜெமினி கணேசன், சரோஜா தேவி, எம் என் நம்பியார் நடித்தனர்

டி ஜி லிங்கப்பா இசையில்..பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் எழுத் டி எம் எஸ். பாடிய என் அருமை காதலிக்கு வெண்ணிலாவே" என்ற பாடல்..இன்றும் காதுகளில் ஒலிக்கும் தேனிசைப்பாடலாகிம் 

கலைஞர் எனும் கலைஞன்-14 அரசிளங்குமரி

அரசிளங்குமரி- 19

படம் வெளியான நாள் 1-1-1961

எம் ஜி ஆர்., பத்மினி, நம்பியார், ராஜ சுலோசனா ஆகியோர்  நடித்திருந்தனர்

ஏ எஸ் ஏ சாமி இயக்கினார்..படத்தின் பெரும்பகுதி எடுத்து முடித்த நிலையில் அவர் விலக ஏ காசிலிங்கம் இயக்கி, படத்தை முடித்தார்.

ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு.

கதை வசனம் கலைஞர்

அறிவழகனின் சகோதரி அன்புக்கரசி. அன்புக்கரசி, வெற்றிவேலனைக் காதலிக்கிறாள்.அவன், அரசவையில் பொறுப்பான பதவியில் இருந்தாலும், தான் ஒரு சாதாரண குடிமகன் என்று சொல்லி அவளை மணக்கிறான்.

சகோதரியின் திருமணத்திற்குப் பின்...வெளியூர் சென்று விடுகிறான் அறிவழகன்.

அன்புக்கரசிக்கு குழந்தை  பிறக்கிறது.குழந்தையையும், மனைவியையும் விட்டுப் பிரியும் வெற்றிவேலன், அரசை கைப்பற்ற திட்டமிடுகிறான் .

அதை அறிவழகன் முறியடிக்கப் பார்க்கிறான்.அன்புக்கரசி, தன் சகோதரனுக்கு எதிராகவும், தன் கணவனுக்கு ஆதரவாகவும் இருக்கிறாள்

முடிவில்...சுபமாய் அனைத்தும் நடந்து முடிகிறது

அறிவழகனாக எம் ஜி ஆரும், அன்புக்கரசியாக பத்மினியும், வெற்றிவேலனாய் நம்பியாரும் நடித்திருந்தனர்

ஜி ராமனாதன், இசையில்..பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதியிருந்த "சின்னப் பயலே..சின்னப் பயலே சேதி கேளடா" இன்றும் எவராலும் மறக்க முடியாத பாடலாக அமைந்துவிட்டது

எம் ஜி ஆரும்..நம்பியாரும் படிக்கட்டில் போடும் கத்திச்சண்டை மட்டும் எடுத்து முடிக்க ஒரு வருடமானதாம்

மொத்த படபிடிப்பும் முடிய ஐந்து வருடங்கள் ஆனதாகத் தெரிகிறது 

கலைஞர் எனும் கலைஞன் - 12 குறவஞ்சி




குறவஞ்சி - 17

படம் வெளியான நாள் -4-3-1960

சிவாஜி கணேசன், சாவித்திரி,பண்டரிபாய்

ஏ காசிலிங்கம் இயக்கம்.

கதை, வசனம் கலைஞர்

இன்பபுரி அரசன் தென்பாண்டிகோ .எல்லைபுரம், அவன் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதி.அதை, தன் தம்பி முகாரி ஆளக்கொடுத்திருந்தான்.இமயா..முகாரியின் மந்திரி,முதலில் எல்லைபுரத்தை அடைய வேண்டும், பின் இன்பபுரியையும் பிடித்துவிடலாம் என திட்டம் தீட்டுகிறான்

கதிரவன் என்னும் இளைஞன் மக்களுக்கு நல்லது செய்பவன்.நாடோ டி போல திரியும் இவன் ஊருக்கும், மக்களுக்கும் நல்லது செய்து வருகிறான்.இளவரசி குமாரி அவனை மணக்க விரும்புகிறாள்.ஆனால், அவனோ பொன்னி என்ற  நாட்டுப்புற கலை அறிந்த பெண்ணை  விரும்புகிறான்

அதேநேரம், இமயா விடமிருந்து நாட்டைக் காக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறான்.

சிவாஜி, கதிரவனாகவும், சாவித்திரி நாட்டுப்புற கலைஞராகவும்  நடித்தனர்

டி ஆர் பாப்பா இசைய மை த்திருந்தார் 

கலைஞர் எனும் கலைஞன் - 11 புதுமைப்பித்தன்.




புதுமைப்பித்தன் - 16

படம் வெளியான நாள் 2-8-1957

எம்.ஜி.ஆர்., டி ஆர் ராஜகுமாரி,பி எஸ் சரோஜா, சந்திரபாபு ஆகியோர் நடித்திருந்தனர்.

டி ஆர் ராமண்ணா இயக்கம்.

கலைஞர் கதை வசனம்.

தன் சகோதரனின் பதவி ஆசையால் அரசன் கைதாகிறான்.அவன் இறந்து விட்டதாகவும் வதந்தியைப் பரப்புகிறான் சகோதரன்.அந்நாட்டு இளவரசனோ  வெளிநாடு சென்றுள்ளான்.

அவன் திரும்பி வருகையில் மன்னன் இறந்து விட்டான் என செய்யப்படும் போலி இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறான்.ஆனால், அப்போது அவனுக்கு ரகசிய செய்தி ஒன்று வருகிறது

மன்னன் இறக்கவில்லை என்பதே அது.

ஆனால்..அந்த செய்தியைத் தருவது ஆண் வேடமிட்ட பெண் ஒருத்தி.அப்பெண்ணை இளவரசன் விரும்புகிறான்

இதனிடையே, மன்னனின் சகோதரன் இளவரசனையும் அழிக்க முயல,நாடகங்கள் நடத்திவரும் ஒரு பெண், இளவரசனுக்கு உதவுவதுடன், அவன் மீது காதலும் கொள்கிறாள்.கடைசியில் தன் காதலைத் தியாகம் செய்கிறாள்.இளவரசன் காக்கப்பட்டு வில்லன் அழிகிறான்

இளவரசனாக எம் ஜி ஆர்., அவன் காதலியாக பி எஸ் சரோஜா,நாடகப் பெண்ணாக டி ஆர் ராஜகுமாரி, மன்னனின் சகோதரனாக பாலையா ஆகியோர் நடித்திருந்தனர்

ஜி ராமநாதன் இசையில்

ஜிக்கி பாடிய "அழகைப்பார்"
ஜெயராமன், ஜிக்கி பாடிய "உள்ளம் இரண்டும் ஒன்னு"
பி சுசீலா வின் "தேன் மதுவை வண்டினம்"
தில்லானா பாட்டுப் பாடணும் எனசந்திரபாபுவின் பாட்டு ஆகியவை இன்றும் மனதை விட்டு அகலாதவை

Saturday, October 29, 2016

கலைஞர் எனும் கலைஞன் - 10 புதையல்



புதையல் - 15

புதையல் ..வெளியான நாள் 10 -5-1957

சிவாஜி,பத்மினி,பாலையா,சந்திரபாபு ஆகியோர் நடித்தது

கிருஷ்ணன் பஞ்சு இயக்கம்,விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை

கலைஞர், கதை-வசனம்..கமால் பிரதர்ஸ் தயாரிப்பு

புதைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்ட தங்கம் பற்றிய  கதை.சிவாஜியும், பத்மினியும் பேசிக்கொண்டிருக்கையில், ஸ்ரீலங்காவில் கொலையான அவளது தாயாரைப் பற்றியும் , தவிர்த்து கைதான தன் தந்தை பற்றியும்,இந்தியாவில் பத்மினியின் சகோதரி தங்கம்இ றந்தது பற்றியும் அவள் புதைக்கப்பட்ட இடம் பற்றியும் பேசுகின்றனர்.

தங்கம் புதைக்கப்பட்டது என்பது கேட்டு..தங்கநகைகள் என நினைத்து அலையும் கும்பல்.

கடைசியில்..எல்லாம் சுகமாய் முடிகிறது

இப்படப்பாடல்கள் சில

விண்ணோடும் முகிலோடும் (ஜெயராமன், சுசீலா)
உனக்காக எல்லாம் உனக்காக (சந்திரபாபு)
சின்னச் சின்ன இழை (பி.சுசீலா)
ஹலோ மை டியர் ராணி (சந்திரபாபு)
தங்க மோகன தாமரையே (சுசீலா), 

கலைஞர் எனும் கலைஞன் - 9 ரங்கோன் ராதா



ரங்கோன் ராதா - 14

அண்ணாதுரையின்  கதைக்கு கலைஞரின் வசனத்தில் வந்த படம் ரங்கோன் ராதா

வெளியான நாள் - 1-11-1956

கோட்டையூர் தர்மலிங்க முதலியார் வக்கிர எண்ணங்களைக் கொண்டவர்.தன் மனைவியின் சகோதரி மீது அவருக்கு ஆசை.அவளை மணமுடிக்க எண்ணுகிறார்.அத்ற்காக தன் மனைவிக்கு பேய் பிடித்து விட்டதாகக் கூறி அவளை பைத்திய நிலைக்கு ஆளாக்குகிறார்

கடைசியில் அவர் சுயரூபம் வெளியாகிறது

மேகலா பிகசர்ஸ் தயாரித்த இப்படத்தை ஏ காசிலிங்கம் இயக்கினார்

டி ஆர் பாப்பா இசையில்பாரதியார்,பாரதிதாசன் பாடல்களுடன், உடுமலை நாராயண கவி,எம்,கே ஆத்மநாதன்,பட்டுக் கோட்டை  கல்யாண சுந்தரம், கலைஞர் ஆகியோர்  பாடல்கள் எழுதினர்

சிவாஜி கணேசன், த்ர்மலிங்க முதலியாராக ஒரு நெகடிவ் பாத்திரத்தில் நடித்தார்.அவர் மனைவியாக பானுமதி, மைத்துனியாக எம் என் ராஜமும் மற்றும் எஸ் எஸ் ராஜேந்திரன், ராஜசுலோச்சனா ஆகியோர் நடித்தனர்.

மந்திரவாதியாக என்.எஸ்.கிருஷ்ணன் நடித்தார்.

முத்துராமன், வக்கீலாக ஒரு சிறு வேடத்தில் இப்படத்தில் வந்தார்

கலைஞர் எனும் கலைஞன் - 8 ராஜா ராணி



ராஜா ராணி - 13

வெளியான நாள் 26-2-1956

சிவாஜி,பத்மினி,எஸ் எஸ் ராஜேந்திரன், , என் எஸ் கிருஷ்ணன் மதுரம்

கலைஞர் கதை  வசனம்

கண்பார்வையற்றவரின் பெண் ராணி.அவருக்கு பாபு என்பவன் நடத்தும் நாடகக் கம்பெனியில் டிக்கெட் விற்று வரும் பணத்திற்கு பொறுப்பாளர்.வேலை

ஒருநாள் நாடகத்திற்கான வசூல் பணம் முழுதும் திருடுப் போகிறது.இதைப் பயன்படுத்தி பாபு, ராணியிடம் தவறாக நடக்க முயலுகிறான்.தப்பி ஓடும் ராணி,ராஜாவின் காருக்குள் புகுந்து கொள்கிறாள்.

அந்த நேரத்தில் லீலா என்ற பணக்காரப் பெண் ஒருவர் வீட்டை விட்டு ஓடி விட்டார் என்ற செய்தியை ராஜா படிக்கிறான் .ராணியை..ராஜா லீலா என எண்ணுகிறான்.ராணியும், அப்படியே அவனிடம் நடிக்கிறாள்.

ராஜா, ஒரு நாடகக் குழு ஆரம்பிக்க, லீலா என்ற பெயரிலேயே ராணி அதில் நடிக்கிறாள்.

சாக்ரடீ ஸ் நாடகம் நடக்கிறது.அதில்..சாக்ரடீஸிற்கு பாபு உண்மையான விஷத்தைக் கலந்து விடுகிறான்

ராஜா தப்பித்தானா...ராணியை மணக்கிறானா..என்பதே மீதக் கதை

சிவாஜி, பத்மினியின் சிறந்த நடிப்பு .சேரன் செங்குட்டவன் என்ற நாடகம் 12 நிமிடங்கள் படத்தில் வருகிறது.சிவாஜி,எஸ் எஸ் ஆர்.,நடிப்பு, கலைஞரின் வசனம்  ..இன்றும் பேசப்படுகிறது

டி ஆர் பாப்பா வின் இசையில்

எம் எல் வி பாடிய வாங்க வாங்க  இன்றிரவு
சீர்காழி கோவிந்தராஜன், ரத்னம் பாடிய பூனைக்கண்ணை மூடிக் கொண்டால்
இன்ப நன்னாள் இதே (எழுதியவர் கலைஞர் பாடியவர் எம் எல் வி)
புது மணிப்புறா (எம் எல் வி)

ஆகிய பாடல்கள் சிறப்பு

எல்லாவற்றிலும் மணிமகுடமாக என் எஸ் கே., மதுரத்தின் குரலில் பலவிதமான சிரிப்புகள் பற்றிய மருதகாசி எழுதிய  பாடல் அமைந்தது

:"சிரிப்பு...இதுதான் சிரிப்பு"

கலைஞர் எனும் கலைஞன் - 7 அம்மையப்பன்



அம்மையப்பன் - 12

அம்மையப்பன் திரைப்படம்  வெளியான நாள் - 24-9-1954

அம்மையப்பன் திரைப்படம் பற்றி கலைஞர் கூறுகையில் மூன்று விசித்திரங்களின் விளக்கமே என் கிறார் கலைநயத்தோடு

காதல் புறா - கன்று நாடும் - பசு- மான் தோல் வேங்கை  என

முத்தனும் (எஸ் எஸ் ஆர்), முத்தாயியும் (ஜி சகுந்தலா) காதலிக்கிறார்கள்.வேடன் ஒருவன் இவர்களுக்கு வில்லனாக வந்து..இந்த ஜோடிப் புறாக்கள் மீது அம்பெய்தி கொல்லப் பார்க்கிறான்.இடையிலே நூலாடும் தாய்ப்பாசம்.முடிவில் மான் தோல் போர்த்த வேங்கை மாள்கிறது.முத்தனும், முத்தாயியும் இணைகின்றனர் 

டி ஆர் பாப்பா இசையமைத்தார் 

கதை- வசனம் கலைஞர்.ஏ பீம்சிங்க் இயக்கம்.நேஷனல் புரடக்சன்ஸ் தயாரிப்பு.இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை
(ஆனால் இதே கதையமைப்புடன் கே ஆர் ராமசாமி, சாவித்ரி நடிக்க கண்ணதாசனும், ஏ கே வேலனும் திரைக்கதை வசனம் எழுத , விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் வந்த சுகம் எங்கே என்ற படம் வெற்றி பெற்றது என்பது  பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்).

.


கலைஞர் எனும் கலைஞன் - 6 மனோகரா



,மனோகரா   - 11

ஜூபிடெர் பிக்சர்ஸ் தயாரிப்பான மனோகரா வெளியான நாள் 3-7-1954

திரைக்கதை- வசனம் கலைஞர்..இயக்கம் எல் வி பிரசாத்

இது பம்மல் சம்பந்த முதலியாரின் கதை.மேடை நாடகமாக நடிக்கப்பட்டு 1936ல் திரைப்படமாக வந்தது.பின்னர் கே ஆர் ராமசாமியால் மீண்டும் மேடையில் நடிக்கப்பட்டது.இந்நாடகத்தில் சிவாஜி கணேசன் அரசியாக பெண் வேடத்தில் நடித்திருந்தார்.

சிவாஜி, கண்ணாம்பா,ராஜகுமாரி, எஸ் எஸ் ஆர், எஸ் ஏ நடராஜன், ஜாவர் சீதாராமன் ஆகியோர் நடித்தனர்

ஒவ்வொருவரும் போட்டிக் கொண்டு நடித்தனர்.யார் நடிப்பு சிறப்பு எனச் சொல்லுவதே கடினம்.

டி ஆர் ராஜகுமாரி, வசந்த சேனை என்ற வில்லி பாத்திரத்தில் மிகவும அருமையாக நடித்தார்

மனோகரானகவே வாழ்ந்தார் சிவாஜி

கண்ணாம்பா மனோகரின் தாயாக வாழ்ந்தார்.

பின்னாளில் இப்படம் பற்றி பேசும்போது சிவாஜி கணேசன் சொன்னாராம்.."என் நடிப்பு...நான் பேசிய வசனங்கள் அனைத்தையும் தன் ஒரே வரி வசன உச்சரிப்பிலும், நடிப்பாலும் தகர்த்தெறிந்துவிட்டார் கண்ணாம்பா என்று.அந்த ஒரு வரி வசனம்..

"பொறுத்தது போதும் மனோகரா..பொங்கி எழு" என்பதே

சிவாஜி கணேசன் ..சங்கிலியால் கட்டப்பட்டு அரசவையில் பேசிய வசனம்...



அரசர்: மனோகரா! உன்னை எதற்காக அழைத்திருக்கிறேன் தெரியுமா?

மனோகரன்: திருத்திக் கொள்ளுங்கள் அரசே! அழைத்து வரவில்லை என்னை. இழுத்துவரச் செய்திருக்கிறீர்கள்.

அரசர்: என் கட்டளையைத் தெரிந்து கொண்டிருப்பாய் நீ.

மனோகரன்: கட்டளையா இது? கரை காண முடியாத ஆசை! பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து கண்ணே முத்தே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே, `வீரனே! என் விழி நிறைந்தவனே!' என்று யாரைச் சீராட்டி பாராட்டினீர்களோ அவனை அந்த மனோகரனை சங்கிலியால் பிணைத்து, சபை நடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்ற தங்கள் தணியாத ஆசைக்குப் பெயர் கட்டளையா தந்தையே?

அரசர்: நீ நீதியின் முன்னே நிற்கும் குற்றவாளி! தந்தையின் முன் தனயனல்ல இப்போது!

மனோகரன்: குற்றவாளி! நான் யாருக்கு என்ன தீங்கிழைத்தேன்? என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? அரசே! தந்தையின் முன் தனயனாக அல்ல, பிரஜைகளில் ஒருவனாக கேட்கிறேன். கொலை செய்தேனா? கொள்ளையடித்தேனா? நாட்டைக் கவிழ்க்கும் குள்ளநரி வேலை நான் செய்தேனா? குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே, குற்றம் என்ன செய்தேன்? கூறமாட்டீர்களா? நீங்கள் கூறவேண்டாம்.

இதோ அறங்கூறும் அமைச்சர்கள் இருக்கிறார்கள். மறவர் குடிப்பிறந்த மாவீரர்கள் இருக்கிறார்கள்! மக்களின் பிரதிநிதிகள் _இந்த நாட்டின் குரல்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூறட்டும்... என்ன குற்றம் செய்தேன்?

சபையோர்: குற்றத்தை மகாராஜா கூறத்தான் வேண்டும்.

அரசர்: இது உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது.

மனோகரன்: சம்பந்தம் இல்லாதது சபைக்கு வருவானேன்? குடும்பத்தகராறு கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இன்றுதான் முதன் முதலாகச் சந்திக்கிறது மகாராஜா!

அரசர்: போதும் நிறுத்து... வசந்த விழாவில் நீ செய்த தவறுக்காக வசந்த சேனையிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.

மனோகரன்: அதற்குத்தான் காரணம் கேட்கிறேன்!

அரசர்: எதிர்த்துப் பேசுபவர்களுக்கு ராஜசபையில் என்ன தண்டனை தெரியுமா?

மனோகரன்: முறைப்படி மணந்த ராணிக்கு சிறைத்தண்டனை அளித்துவிட்டு, மூலையில் கிடந்ததற்கு முடிசூட்டியவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையை விடக் குறைவானதுதான்.

அரசர்: ஆத்திரத்தைக் கிளப்பாதே! நிறைவேற்று. அரசன் உத்திரவு.

மனோகரன்: அரசன் உத்திரவென்ன? ஆண்டவனின் உத்திரவுக்கே காரணம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அரசே! சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டும் தாய் என்று கேள்விப்பட்ட பின்னும் அடங்கிக் கிடப்பவன் ஆமை!

அரசன்: தாய்க்கும், தந்தைக்கும் வேற்றுமை அறியா மூடனே! தந்தையின் ஆணை கேட்டு தாயாரின் தலையை வெட்டி எறிந்த பரசுராமனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா நீ?

மனோகரன்: பரசுராமன் அவதாரம். மனோகரன் மனிதன்!"

வேறு ஒரு காட்சியில் வசனம்


  • புருஷோத்தமரே! புரட்டுக்காரியின் உருட்டு விழியில் உலகத்தைக் காண்பவரே! மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த மறவேந்தர் பரம்பரையில் மாசாக வந்தவரே! மயிலுக்கும் மந்திக்கும் வித்தியாசம் தெரியாத மதிவாணரே! குளிர் நிலவைக் கொள்ளிக்கட்டையெனக் கூறிய குருடரே! என் தாய் அன்பின் பிறப்பிடம், அற நெறியின் இருப்பிடம், கருணை வடிவம், கற்பின் திருவுருவம், மாசற்ற மாணிக்கம், மாற்றுக் குறையாத தங்கம். அவர்களை அவதூறு கூறிய அங்கங்களை பிளந்தெறிவேன். இந்த துரோகப் பேச்சுக்கும் உம்மைத் தூண்டிவிட்ட துரோகியின் உடலை துண்டாடுவேன். துணிவிருந்தால், தோளில் வலுவிருந்தால், எடுத்துக் கொள்ளும் உமது வாளை. தடுத்துக் கொள்ளும் உமது சாவை. தைரியமில்லாவிட்டால், தளுக்குக்காரியின் குலுக்குச் சிரிப்பிலே நீர் கோழையாகிவிட்டிருந்தால், ஓடி விடும். புறநானூற்றின் பெருமையை மூட வந்த புழுதிக் காற்றே! புறமுதுகு காட்டி ஓடும்! கலிங்கத்துப் பரணியை மறைக்க வந்த காரிருளே! கால் பிடரியில் இடிபட ஓடும்! ஓடும்! ஓலமிட்டு ஓடும்! ஓலமிட்டு ஓடும்! ஓங்காரக் கூச்சலிட்டு ஓடும்! ஏன், அவமானமாக இருக்கிறதா? என் அன்னையை தூஷித்த சின்னஞ்சிறு புழுவே, ஏன் சிலையாக மாறிவிட்டீர்? ஏ ராஜ விக்ரகமே! பழி வாங்கும் பக்தன் பூஜை செய்ய வந்திருக்கிறான். அப்படியே நில்லும்! அசையாமல் நில்லும்! இந்த சித்து வேலைக்காரியின் ரத்தத்தைக் கொண்டு உமக்கு அபிஷேகம் செய்கிறேன். இந்த நாசக்காரியின் நரம்புகளால் உமக்கு மாலை சூட்டுகிறேன். முல்லைச் சிரிப்பென புகழ்வீரே, மோக போதையில்! அந்தப் பல்லை எடுத்து உமக்கு அர்ச்சனை செய்கிறேன்.


இந்த அளவிற்கு வசனங்களையும், தமிழையும், உச்சரிக்கும் நடிகர்களையும் இன்றைய திரையுலகில் பார்ப்பது அரிது..அரிது..அரிதாகும்

நல்ல கதையமைப்பும், அருமையான வசனங்களும், கலைஞர்களின் நடிப்பும் இருந்தால் அப்படத்தை மக்கள் வரவேற்பார்கள் என்ற பொருள் பட ஆனந்தவிகடன் இப்படத்திற்கு விமரிசனம் எழுதியது

எஸ் வி வெங்கட்ராமன்,டி வி ராமநாதன் இசையில் வந்த பாடல்கள்

சிங்கார பேண் கிளியே பேசு (ஏ எம் ராஜா, ராதா ஜெயலட்சுமி)
நிலவில் உல்லாசமாய் ஆடலாம் (மோதி, ரத்னம்)
சந்தேகம் இல்லை(எஸ் வி வெங்கட்ராமன், சி எஸ் பாண்டியன்)
என்னைப் பாரு என் அழகைப் பாரு (டி வி ரத்னம்)

கலைஞர் எனும் கலைஞன் - 5 நாம் (10)



10ஆவது படம் நாம்

1953 ல் வந்த படம்

ஜூபிடெர் பிக்சர்ஸும், மேகலா பிக்சர்ஸும் இணைந்து தயாரித்த படம் நாம்

கலைஞர் திரைக்கதை, வசனம்.

(மேகலா பிக்சர்ஸில் கலைஞர், பத்திரிகையாளர் ராஜாராம் என்பவர், எம் ஜி ஆர்., ஜானகி ஆகியோர் பங்குதாரர்கள்)

குமரன் ..முற்போக்குக் கொள்கைகள் கொண்டவன்.இளைஞன்.அவன்  தாயார் இறக்கையில்  தான்,  அவன் பணக்காரன் என்றும் எஸ்டேட் முதலாளி என்றும் தெரிய வருகிறது.மலையப்பன் என்பவனால் அனைத்தும் மறைக்கப்படுகிறது ஆனால், மலையப்பனின் சகோதரி மீனாவை குமரன் விரும்புகிறான்.ஆனால்..சஞ்சீவி என்னும் மருத்துவர் ஒருவர் குமரனுக்கு தன் மகளை திருமணம் செய்வித்து, அவனது சொத்தை அடைய நினைக்கிறார்.

சொத்து சம்பந்தமான உயில் குறித்து, மீனா மீது சந்தேகம் ஏற்பட..குமரன் ஊரை விட்டு செல்கிறான்.

இதனிடையே...குமரன் ஒரு குத்துச் சண்டை  வீரனாகிறான்.ஒரு சண்டையின் போது முகத்தில் அடிபட்டு..அவன் முகம் மாற,,வெளியில் தலைகாட்டுவதைத் தவிர்த்து..இரவில் உலாவும் அவனை மக்கள் பேய் என பயப்படுகின்றனர்

கடைசியில் உண்மை வெளிவந்து..காதலர்கள் ஒன்று சேருகின்றனர்,

குமரனாக எம் ஜி ஆரும், மீனாவாக ஜானகியும், மலையப்பனாக பி எஸ் வீரப்பாவும், மருத்துவராக எம் ஜி சக்ரபாணியும் நடித்தனர்

சிதம்பரம் ஜெயராமன் இசையமைத்துள்ளார்

ஆனாலும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைத்  தரவில்லை என்பதே உண்மை

Friday, October 28, 2016

கலைஞர் எனும் கலைஞன் - 1

கலைஞர் என்னும் கலைஞன் - 1

தமிழ்த்திரையில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு சிலரே!

அவர்களில் கலைஞரும் ஒருவர்.கிட்டத்தட்ட 70 படங்களில் அவர் பணியாற்றியிருக்கிறார்.கதை,திரைக்கதை,வசனம் இருபது படங்களுக்கு எழுதி இருக்கிறார்.கதை,திரைக்கதை இரு படங்களுக்கு எழுதி இருக்கிறார். திரைக்கதை,வசனம் முப்பத்தி மூன்று படங்களுக்கு எழுதி இருக்கிறார்.நான்கு படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.பதினெட்டு படங்களில் பாடல் எழுதியுள்ளார்.

எனக்குத் தெரிந்த அளவில்..அப்படங்கள் பற்றி எழுத உள்ளேன்.இது ஒரு திரைக்கலைஞன்  பற்றிய பதிவு.அதனால்..அரசியல் சம்பந்தப்பட்ட பின்னூட்டங்களை தவிர்க்கவும்..

1924ல் பிறந்த கலைஞர் வசனத்தில் வந்த முதல் படம் 1947ல்..அதாவது அவரின் 23ஆம் வயதில் வந்த படம் ராஜகுமாரி
இப்படத்தில் எம் ஜி ஆர்., மாலதி, பாலையா,நம்பியார் நடித்துள்ளனர்/ஏ எஸ் ஏ சாமி இயக்கம்.எம்  ஜி ஆரின் 15ஆவது படம்.அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இப்படத்தில் சின்னப்ப தேவருக்கு சிறு வேடம் கொடுக்கப்பட்டது.ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு

1948ல் அபிமன்யூ படம்.
இப்புராணப் படத்தில் சாமார்த்தியமாக அரசியல் வசனங்களை எழுதினார் கலைஞர்.படம் முடிந்ததும் தியேட்டரில் மனைவியுடன் படம் பார்க்கப் போனவருக்கு அதிர்ச்சி, வருத்தம்.டைட்டிலில் வசனம் என இயக்குநர் பெயரே இருந்தது (பின்னர் வந்த படங்களில், படத்த்லைப்பிற்குப் பின் வசனம் கருணாநிதி எனப் பெயர் வர ஆரம்பித்தது.இதுவே கலைஞர் பேனாவின் வலிமை)

அபிமன்யூவில் கலைஞரின் சில வசனங்கள்

"ஒடிந்த வாளானாலும் ஒரு வாள் கொடுங்கள்
"அண்ணன் செய்த முடிவை கண்ணன் மாற்றுவதற்கில்லை" "கண்ணன் மனமும் கல்லா"
"அர்ச்சுனனால் துளைக்க முடியாத சக்கரவியுகத்தை அபிமன்யூ துளைத்து விட்டானென்றால் அங்கேதான் இருக்கிறது ஆச்சாரியாரின் விபீஷண மூளை

1950ல் மருத நாட்டு இளவரசி..எம்.ஜி.ஆர்., ஜானகி நடித்தது..

. இதில் எம்.ஜி.ஆரின் சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா, சி.கே.சரஸ்வதி ஆகியோரும் நடித்தனர்.
கதை-வசனத்தை மு.கருணாநிதி எழுத ஏ.காசிலிங்கம் டைரக்ட் செய்தார்.
இந்தப் படத்தில் வி.என். ஜானகி மருதநாட்டின் இளவரசி. அவர், சாதாரண இளைஞனான எம்.ஜி.ஆரை காதலிப்பார். அவர் இளவரசி என்று எம்.ஜி.ஆருக்குத் தெரியாது. அதனால் அவரும் காதலிப்பார். எம்.ஜி.ஆருக்கு கத்திச்சண்டை கற்றுத்தருவார், ஜானகி!
மருதநாட்டு அரசரை பதவியில் இருந்து இறக்க அவரது இளைய மனைவியின் சகோதரன் (மைத்துனன்) திட்டம் தீட்டுவான். அதை எம்.ஜி.ஆரும், ஜானகியும் சேர்ந்து முறியடிப்பதே இப்படத்தின் மூலக்கதை.
இந்தப் படத்தில், எம்.ஜி.ஆர். ஒரு வேட்டி மட்டும் அணிந்து சாதாரண குடிமகனாக நடிப்பார். படம் முழுவதும் இந்த ஒரே உடைதான்! கருணாநிதியின் வசனம் அருமையாக அமைந்தது. எம்.ஜி.ஆரும், ஜானகியும் சிறப்பாக நடித்திருந்தனர். எம்.ஜி.ஆரின் கத்திச்சண்டைகள் ரசிகர்களைக் கவர்ந்தன. படம் அமோக வெற்றி பெற்றது

1950ல் வந்த இன்னொரு படம் மந்திரிகுமாரி..இப்படத்தில்..'என் எருமைக் கன்னுக்குட்டி'என்ற பாடலும் எழுதி..பாடலாசிரியர் ஆனார் கருணாநிதி

ஐம்பெரும் காவியங்களில் ஒன்றான “குண்டலகேசி”யில் வரும் ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து, “மந்திரிகுமாரி” என்ற நாடகத்தை கருணாநிதி உருவாக்கியிருந்தார். ஏற்கனவே மேடையில் வெற்றி பெற்ற அந்த நாடகத்தை திரைப்படமாகத் தயாரிக்க  மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் நினைத்தார்

திரைக்கதையை அமைத்து, வசனத்தை எழுதித் தரும்படி கருணாநிதியிடம் சுந்தரம் கேட்டுக்கொண்டார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்று, வசனம் எழுதத் தொடங்கினார் கருணாநிதி.

மந்திரிகுமாரியின் கதாநாயகனாக யாரைப் போடுவது என்று சுந்தரம் யோசித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே கருணாநிதி வசனம் எழுதிய ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருந்ததால், அவருக்கும், கருணாநிதிக்கும் நெருங்கிய நட்புறவு ஏற்பட்டிருந்தது. எனவே, கதாநாயகன் வேடத்துக்கு எம்.ஜி.ஆரை கருணாநிதி பலமாக சிபாரிசு செய்தார்.

“ராஜகுமாரி” படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்திருந்தாலும், தொடர்ந்து அவருக்கு கதாநாயகன் வேடம் கிடைக்கவில்லை. சுந்தரமும் உடனடியாக அவரை கதாநாயகனாகத் தேர்வு செய்யாமல், “அவருக்கு தாடையில் பெரிய குழி இருக்கிறதே” என்றார். “அங்கு சிறிய தாடியை ஒட்ட வைத்து விட்டால் சரியாகிவிடும். தளபதி வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார். சண்டைக் காட்சிகளில் பிரமாதமாக நடிப்பார்” என்று கருணாநிதி எடுத்துக் கூறினார். அதன்பின் எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்தார் சுந்தரம்.

மந்திரிகுமாரியில் வில்லன் வேடம் முக்கியமானது. அதற்கு நாடக நடிகர் எஸ்.ஏ.நடராஜன் தேர்வு செய்யப்பட்டார். மற்றும் ராஜகுமாரி வேடத்துக்கு ஜி.சகுந்தலா, மந்திரிகுமாரி வேடத்துக்கு மாதுரிதேவி, ராஜகுரு வேடத்துக்கு எம்.என். நம்பியார் ஒப்பந்தமானார்கள்.

“மந்திரி குமாரி”யின் கதை, திருப்பங்கள் நிறைந்தது.  முல்லை நாட்டு மன்னரின் மகள் ஜீவரேகவும் (ஜி.சகுந்தலா) மந்திரியின் மகள் அமுதாவும் (மாதுரிதேவி) ஆருயிர் தோழிகள். தளபதி வீரமோகனை ராஜகுமாரி காதலிக்கிறாள்.

மன்னரை ஆட்டிப்படைக்கும் ராஜகுருவின் (எம்.என்.நம்பியார்) மகன் பார்த்திபன் (எஸ்.ஏ.நடராஜன்) கொடூரமானவன். பகலில் ராஜகுருவின் மகன். இரவில் பயங்கர கொள்ளைக்காரன். “கொள்ளையடிப்பது ஒரு கலை” என்பது அவன் கொள்கை.

மந்திரிகுமாரி அமுதாவைக் கண்டதும் அவளை அடையத்துடிக்கிறான். அவனுடைய சுயரூபத்தை அறியாத அவள், அவனை மணக்கிறாள். கொள்ளைக் கூட்டத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் தளபதி ராஜமோகன் ஈடுபட்டு, பார்த்திபனை பிடித்து அரசவையின் முன் நிறுத்துகிறான். ஆனால் ராஜகுருவின் சூழ்ச்சியால் பழி ராஜமோகன் மீது விழுகிறது.

தன் கணவன் கொடியவன் _ கொள்ளைக்காரன் என்பதை, அமுதா அறிந்து கொள்கிறாள். அவனைத் திருத்த முயல்கிறாள். உண்மையை அறிந்து கொண்டு விட்டாளே என்ற ஆத்திரத்தில், அவளைத் தீர்த்துக்கட்ட பார்த்திபன் முடிவு செய்கிறான்.

“வாராய் நீ வாராய்” என்று பாட்டுப்பாடி, அவளை மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கிருந்து அவளைத் தள்ளிவிட அவன் முயற்சி செய்யும்போது, “சாவதற்கு முன் உங்களை மூன்று முறை சுற்றி வந்து வணங்க அனுமதியுங்கள்” என்று வேண்டுகிறாள், அமுதா.

அதற்கு அவன் சம்மதிக்கிறான். மூன்றாவது முறை சுற்றி வரும் போது, அவனை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விடுகிறாள். அவள் மூலம், உண்மையை அறிகிறார், அரசர். ராஜகுரு சிறைப்படுத்தப்படுகிறார். அரசகுமாரியும், தளபதியும் ஒன்று சேருகின்றனர்.

 கதை, வசனம், நடிப்பு, இசை எல்லாமே இதில் சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக, கருணாநிதியின் வசனங்கள் கூர்மையாக அமைந்திருந்தன. “அனல் பறக்கும் வசனம்; கனல் தெறிக்கும் நடிப்பு” என்று விளம்பரம் செய்தார்கள்.

நம்பியாருக்கும், எஸ்.ஏ.நடராஜனுக்கும் இடையே நடைபெறும் ஒரு உரையாடல்:

“பார்த்திபா! நீ கொள்ளையடிப்பதை விட்டுவிடக் கூடாதா?”

“கொள்ளை அடிப்பதை விட்டு விடுவதா? அது கலையப்பா, கலை!”

“என்ன! கொள்ளையடிப்பது கலையா?”

“ஆம் தந்தையே! அது கலைதான். வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!”

“இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?”

“கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.” இத்தகையை வசனங்கள் ஏராளம்.

“கொள்ளை அடிப்பதை கலை என்று கருணாநிதி கூறுகிறார்” என்று மாற்றுக் கட்சியினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

அதற்குக் கருணாநிதி கூறிய பதில்: “கொள்ளை அடிப்பதும் ஒரு கலை என்று, அப்படத்தில் தீயவன் ஒருவன்தான் கூறுகிறான். கடைசியில் அவன் அழிந்து போகிறான். ராமாயணத்தை எழுதியவர், கூனி பாத்திரத்தையும் படைத்தாரே, கூனியின் சுபாவம் அதை எழுதியவருக்கு சொந்தமானதா? மகாபாரதத்தை எழுதியவர், சகுனி பாத்திரத்தைப் படைத்தாரே. அப்படியானால் அவர் சகுனியின் செய்கைகளை ஆதரிப்பதாக அர்த்தமா?”

_ இவ்வாறு எதிர்ப்பாளர்களுக்குப் பதில் அளித்தார், கருணாநிதி.

1951ல் தேவகி..கலைஞரின் அருமையான வசனங்கள்..
இப்படத்தில் வரும் ஒரு வசனம்
பெரியம்மா குத்துவிளக்கு
சின்னம்மா எலெக்டிரிக் விளக்கு
இப்படத்திற்கு ஜி.ராமநாதன் இசை அமைத்துள்ளார்

1951 மணமகள் இப்படத் தயாரிப்பாளர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆவார்.திரைக்கதை கலைஞர்.எஸ்.வி.சகஸ்ரநாமம்,என்.எஸ்.கே.,லலிதா,பத்மினி ,   பாலையா ஆகியோர் நடித்தனர்.இப்படத்தில் எஸ் எஸ் ஆர் பிச்சைக்காரனாக நடித்தார்.அவர் நடித்த முதல் படம்.ஆனால், தணிக்கையதிகாரிகளால் அவர் பேசிய வசனங்கள் வெட்டப்பட்ட போது அவரது பாத்திரமும் படத்தில் இல்லை.ஆனாலும், டைடிலில் அறிமுகம் எஸ் எஸ் ஆர்.,எனக் காட்டப்பட்டது

கணவரின் கொடுமையைத் தாங்க முடியாத கதாநாயகி மனைவியாக விரும்பாமல் மணமகளாகவே இருக்கும் கதையாகும்.
இனி அடுத்த பதிவில்..

கலைஞர் எனும் கலஞன் - 4 திரும்பிப்பார்



பராசக்தி என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த கூட்டணியிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக அமைந்தது "திரும்பிப்பார்"  படம் வெளியான நாள் 10=7-1953

இதில் சிவாஜி வில்லன் (என்ன ஒரு தைரியம்)

முழுக்க முழுக்க அயோக்கியன்.ஆனால், அழகான, திறமையான,புத்திசாலியான வில்லன்

பரந்தாமன் (சிவாஜி) ஒரு பெண்பித்தன் தன் அக்காள் (பண்டரிபாய்) வளர்த்து வருகிறாள்.பல பெண்களை ஏமாற்றி,தொழிலாளர்களை சுரண்டி, பிறர் எழுதும் கதைகளை தன் பெயரில் போட்டு....இப்படி அவரது கொடுமையான செயல்களுக்கு அளவே இல்லை

இவனுக்கு நேர் எதிர் பாண்டியன் (நரசிம்ம பாரதி).

பரந்தாமன், அவனது அக்காள், பாண்டியன் இவர்களுக்குள் ஏற்படும் முரண்பாடு, மோதல்கள் இதுதான் கதை

ஆரம்பமே கோர்ட் சீன்.பரந்தாமனைக் கொன்றதாக பாண்டியன் குற்றவாளிக் கூண்டில்.அவன் குற்றவாளி யில்லை என பண்டரிபாய் வாதாடுகிறாள்.படம்...பின்னோக்கி(ஃபிளாஷ் பேக்) செல்கிறது

வசனம் முழுதும் இப்படத்தில் ஹியுமரிலேயே செல்லும்

அந்த நாட்களில் நேரு தி முக வினரை ஒருசமயம் நான்சென்ஸ் என விமரிசித்தார்.இதை வைத்து, நேருவைப் போலவே கருப்பு கண்ணாடி, சூட் அணிந்து சிவாஜி வருவார்.அடிக்கடி நான்சென்ஸ் என்பார்

ஒருகாட்சியில் தொழிலாளி ஒருவன் சம்பளம் கேட்டு வருவான்.அதற்கு நான்சென்ஸ் என்பார் சிவாஜி

கருடன் பதிப்பக உரிமையாளர் துரைராஜ்..அவர், பரந்தாமா நீ புத்தகம் எழுது.வரும் லாபத்தில் முக்கால் எனக்கு கால் உனக்கு என்பார்
அப்போது தொழிலாளி "எனக்கு" என்பார்
அவனுக்குக் கால் உனக்கு அறை (என தொழிலாளி கன்னத்தில் அடிப்பார்)

பராசக்தி போலவே குற்றம் சாட்டப்பட்டு, கோர்ட்டில் நிறபார் சிவாஜி (பராசக்தி எஃபெக்டில் வசனம் பேசப்போகிறார் என மக்கள் இருக்கையின் நுனிக்கு வருவார்கள்)ஆனால் இவரோ..இந்த குற்றச்சாட்டுத் தவறு.உண்மையாய் இருந்தால் என்னை மன்னிக்கவும் என முடித்துக் கொள்வார்

இப்படத்திற்கு இசை ஜி ராமநாதன்

ஜிக்கி பாடிய ஆனா டுனா ஆடு, எஸ் சி கிருஷ்ணன் பாடிய "கலப்பட கலப்படம்", திருச்சி லோகநாதன், பி.லீலா பாடிய கண்ணாலே பண் பாடும் ஆகிய பாடல்கள் இனிமை

பண்டரிபாய் பேசும் வசனங்களும், சிவாஜி பேசும் வசனங்களும் படத்தின் ஹைலைட் எனலாம்..

பெண்பித்தனான பரந்தாமனிடம்..உனக்கு ஒரு பெண்தானே வேண்டும் நான் இருக்கிறேண் என் அக்காள் கூறுவதும்..

பின்னர் தவறுணர்ந்த பரந்தாமன்..

தன்னைத் தானே திட்டிக் கொள்வதும்..
"ஏ..மானிட இனமே ..நீ குரங்கிலிருந்து வந்தாயாம்..குரங்கு மனப்பானமை உனக்குக் குறைந்துவிட்டதா என திரும்பிப்பார்.. என பேசும் வசனங்களும் இன்னமும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருப்பது வசனகர்த்தாவின் சிறப்பின்றி வேறு என்ன.. 

கலைஞர் என்னும் கலைஞன் - 3 பணம்



1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் நாள் வந்த படம் "பணம்"

பராசக்தி வெளியாகி இரண்டே மாதத்தில் வந்த படம்..ஏ எல் ஸ்ரீனிவாசன் தயாரிக்க என் எஸ் கே இயக்கத்தில் கலைஞர் திரைக்கதை வசனத்தில் வந்த படம்

பேராசைப் பிடித்த பணக்காரனுக்கு ஒரே மகன்.அவன் ஏழைப் பெண்ணை மணக்கிறான்.அவள், வரதட்சணை கொண்டு வராததால் பணக்காரனால் வீட்டை விட்டு துரத்தப் படுகிறாள்.அவளைக் காப்பாற்றுபவன் அவளை ஒரு மாளிகையில் அடைத்து வைக்கிறான்.இதனி டையே, அந்தப் பணக்காரன் தன் மகனுக்கு வேறு ஒரு பணக்காரப் பெண்ணை மணமுடிக்கிறான்.ஆனால், அவளோ திருமணத்தன்று இரவு, தான் வேறு ஒருவனைக் காதலித்ததாகக் கூறி வெளியேறுகிறாள்.

இந்நிலையில், கதாநாயகி அடைத்து வைக்கப் பட்டுள்ள மாளிகையில்  ஒரு கொலை நடக்கிறது.கதாநாயகன் கைதாகிறான்.உண்மைக் குற்றவாளி யார்..அவன் கைதானானா, கதநாயகன் விடுவிக்கப் பட்டானா, கணவன் ;மனைவி இணைந்தனரா..என்பதே மீதிக் கதை.

கலைஞரின் வசனங்கள் இப்படத்திலும் பாராட்டப்பட்டன

கண்ணதாசன் பாடல்களை இயற்றினார்.

ஒரு பாடல்..என்.எஸ் கே பாடிய :தினா மூனா கானா" என்ற பாடல்.தணிக்கை அதிகாரிகளுக்காக ''அது "திருக்குறள் முன்னேற்ற கழகம்" எனப் பாடப்பட்டது.

இரண்டு மாதங்கள் முன்னர் வந்திருந்தால் சிவாஜிடின் முதல் படமாக இது அமைந்திருக்கும்

சிவாஜி, பத்மினி, என் எஸ் கே., மதுரம், எஸ் எஸ் ஆர்., வி கே ராமசாமி ஆகியோர் நடித்திருந்தனர்

Thursday, October 27, 2016

கலைஞர் என்னும் கலைஞன் - 2 பராசக்தி



17-10-1952  தீபாவளி நாள். தமிழ்த் திரையுலகையே திருப்பிப் போட்ட நாள் எனலாம்'

ஆம்...அன்று வெளிவந்த படம்...பராசக்தி

இன்றளவும் மக்கள் மனதை விட்டு அகலாத ஒரு படம்.

நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ பெருமாள் ஏ வி எம்முடன் இணைந்து கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் எடுத்த படம்

இப்படத்தில் சிவாஜி கணேசன் என பின்னாளில் நடிகர் திலகமாய்க் கொடிக்கட்டிப் பிறந்த வி.சி கணேசன் அறிமுகமான படம்.இப்படத்தில் அவர் நடிக்க எதிர்ப்பு இருந்தது.கே ஆர்.ராமசாமி தான் நடிக்க வேண்டும் என்றனர்.ஆனால். பெருமாள், வி சி கணேசன் தான் என்பதில் உறுதியாய் இருந்தார்.

கணேசன் நடித்தார்.முதல் நாள் படபிடிப்பில் அவர் உச்சரித்த முதல் வார்த்தை "சக்சஸ்"

படமும் சக்சஸ், அவர் திரையுலக்ப் பணியும் சக்சஸ்

கலைஞரின் வசனத்தாலும், சிவாஜி, எஸ் எஸ் ஆர்., ஆகியோரின் உச்சரிப்பாலும் அவை அப்படியே இன்னமும் உலா வந்துக் கொண்டிருக்கின்றன

சந்திரசேகரன், ஞானசேகரன், குணசேகரன் மூன் று சகோதரர்கள் ரங்கூனில் வசித்து வருகின்றனர்.அவர்களது த்ங்கையோ மதராசில்.இரண்டாம் உலக யுத்தம் நடைபெறும் நேரம்.மதராசிற்குக் குடிப் பெயர சகோதரர்கள் நினைக்கின்றனர்.ஆனால்...சரியான போக்குவரத்து சீட்டுக் கிடைக்காததால், அவர்கள் ஒவ்வொருவரும் பிரிய நேரிடுகிறது.
அவர்களது த்ங்கை கல்யாணியோ இங்கு விதவை..கையில் ஒரு குழ்ந்தையுடன்.அவளை பாலியல் பலாத்காரம் செய்ய முயல்கிறார்கள் சமுக விரோதிகள்.அவள், வறுமை தாங்காது, தன் குழ்ந்தையை ஒரு கிணற்றில் வீசிவிட்டு தற்கொலைக்கு முயல்கிறாள்.

காப்பாற்றப்பட்டு...நீதி மன்ற  கூண்டில் அவள்.அப்போது..

நீதிமன்றத்தில் சிவாஜி பேசும் கலைஞரின் இந்த வசனம் ஒலிக்காத இடங்கள் இல்லை அன்று.ஒவ்வொரு இளைஞனுக்கும் மனப்பாடம் இது.

இந்தளவு தாக்கத்தை இதுவரை எந்தப்படமும் இதுவரை ஏற்படுத்தவில்லை என  உறுதியாகக் கூற்லாம்.

 அந்த வசனத்தைப் பாருங்கள்-

  நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.
கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். பூசாரியைத் தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.
உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.
என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.
தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. திருமணக் கோலத்தில் இருந்த என் தங்கையைக் காண வந்தேன். மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி ஜூலி, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். பசியால் மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன்.
காண வந்த தங்கையைக் கண்டேன். கண்ணற்ற ஓவியமாக. ஆம் கைம்பெண்ணாக, தங்கையின் பெயரோ கல்யாணி. மங்களகரமான பெயர். ஆனால் கழுத்திலே மாங்கல்யமில்லை. செழித்து வளர்ந்த குடும்பம் சீரழிந்துவிட்டது. கையில் பிள்ளை. கண்களிலே நீர். கல்யாணி அலைந்தாள். கல்யாணிக்காக நான் அலைந்தேன்.
கல்யாணிக்குக் கருணை காட்டினர் பலர். அவர்களிலே காளையர் சிலர் அவளுடைய காதலைக் கேட்டனர். கொலை வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் வேணு, இவன் பகட்டால் என் தங்கையைக் கற்பழிக்க முயன்றான். நான் தடுத்திராவிட்டால் கல்யாணி அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பாள்.
கடவுள் பக்தர்களும் கல்யாணிக்குக் கருணை காட்ட முன்வந்தார்கள். பிரதி உபகாரமாக அவள் கடைக்கண் பார்வையைக் கேட்டனர். அதில் தலையானவன் இந்தப் பூசாரி. கல்யாணியின் கற்பைக் காணிக்கையாகக் கேட்டிருக்கிறான் – பராசக்தியின் பெயரால், உலக மாதாவின் பெயரால். கல்யாணி உலகத்தில் புழுவாகத் துடித்தபடியாவது உயிரோடு இருந்திருப்பாள். அவளைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது இந்த பூசாரிதான். தன் குழந்தையை இரக்கமற்ற உலகத்தில் விட்டுச் செல்ல அவள் விரும்பவில்லை. தன் குழந்தை ஆதரவற்றுத் துடித்துச் சாவதைக் காண அவள் விரும்பவில்லை. அவளே கொன்றுவிட்டாள். விருப்பமானவர்களைக் கொல்வது விந்தையல்ல. உலக உத்தமர் காந்தி, அஹிம்சா மூர்த்தி ஜீவகாருண்ய சீலர், அவரே நோயால் துடித்துக் கொண்டிருந்த கன்று குட்டியைக் கொன்றுவிடச் சொல்லியிருக்கிறார், அது கஷ்டப்படுவதைக் காணச் சகிக்காமல். அந்த முறையைத்தான் கையாண்டிருக்கிறாள் கல்யாணி. இது எப்படி குற்றமாகும்?
என் தங்கை விட்டுக் கொடுத்திருந்தால், கோடீஸ்வரன் பள்ளியறையிலே ஒரு நாள் – மானத்தை விலை கூறியிருந்தால், மாளிகை வாசியின் மடியிலே ஒரு நாள் – இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை. இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது?
பகட்டு என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள். பணம் என் தங்கையைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். பக்தி என் தங்கையை பயமுறுத்தியது. ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள். அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? வாழவிட்டார்களா என் கல்யாணியை?
அரசு வக்கீல்: குற்றவாளி யார் யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.
குணசேகரன்: யார் வழக்கிற்குமில்லை. அதுவும் என் வழக்குதான். என் தங்கையின் வழக்கு. தங்கையின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட அண்ணன் ஓடுவதில் என்ன தவறு? கல்யாணி தற்கொலை செய்துகொள்ள முயன்றது ஒரு குற்றம். குழந்தையைக் கொன்றது ஒரு குற்றம். நான் பூசாரியைத் தாக்கியது ஒரு குற்றம். இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்? கல்யாணியைக் கஞ்சிக்கில்லாமல் அலையவிட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா? பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா? கடவுள் பெயரால் காம லீலைகள் நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும் கல்யாணிகளும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்

பூசாரி, சிவாஜியின் விதவைத் தங்கையிடம் முறைகேடாக நடப்பான்.அப்போது அவனைக் கண்டிக்க வரும் சிவாஜி அம்பாள் சிலையின் பின்னே இருந்து பேசுவார்.பூசாரி, "அம்பாளா பேசறது" என்பான்

அதற்கு சிவாஜி, "அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?" என்பார் சிவாஜி

பெரும் சர்ச்சைக்கு உள்ளான வசனமாய் இது அமைந்தது

பராசக்தி தமிழ் சினிமாவின் ஒரு புதிய அலை. பராசக்தி படத்தின் வசனங்கள் மட்டுமல்ல, அதன் திரைக்கதைகூட நவீனமானது, எளிமையானது. எளிய மக்களையும் மனதில் கொண்டு எழுதப்பட்டது.

படத்தில் சிவாஜியின் காதலியாக வரும், பண்டரிபாய் பெரியாரின் சுயமரியதை கொள்கையை கடைபிடிக்கும் பெண். ஆணைவிட அதாவது கதாநாயகனைவிட புத்திசாலி. பண்டரிபாயின் சகோதரர், சுயமரியாதை கொள்கைகளை பிரச்சாரம் செய்யும் சொற்பொழிவாளர் கதாபாத்திரம்.
படத்தின் கடைசிக் காட்சியில், பண்டரிபாய்க்கும் சிவாஜிக்கும் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று குடும்பத்தார், பேசிக்கொள்வார்கள். திருமணத்தை வைதீக முறைபடி நடத்த வேண்டும் என்று சொல்லும்போது, ‘அதெல்லாம் எதற்கு? தாலிகூட வேண்டாம். இரண்டு மாலை. ஒரு சொற்பொழிவாளர் போதும்’ என்று பெரியாரின் சுயமரியாதை திருமண முறையை வலியுறுத்திதான் படம் முடியும்.
பிச்சைக்காரர்களை மிகக் கேவலமாக சித்தரித்து நகைச்சுவை செய்கின்றன இன்றையத் தமிழ் சினிமாக்கள். ஆனால் அந்தக் காலத்திலேயே,  பிச்சைக்காரர்களை மரியாதைக்குரியவர்களாக காட்டிய ஓரே படம் பராசக்திதான்.
ரங்கூனில் இருந்து சிவாஜி கப்பலில் வந்து சென்னையில் இறங்கியவுடன், தன்னிடம் பிச்சை கேட்கும் குரலை, விமர்சிப்பார். அந்த விமர்சனம்கூட பிச்சைக்காரரை குறைசொல்வதாக இல்லாமல், சமூகத்தைகுறை சொல்வதாகதான் இருக்கும். பிறகு எஸ்.எஸ.ஆர்., பிச்சைகாரர்களுக்காக சங்கம் வைத்து அவர்களின் உரிமைக்காக போராடுபவராகவும் வருவார்.

. மக்களுக்கு தேவையில்லாத அல்லது ஆபத்தான கருத்தை பாராசக்தி சொல்லவில்லை. மாறாக பல புதிய சீர்திருத்தக் கருத்துக்களைத்தான் சொன்னது.

இப்படத்திற்கு இசையும் கைகொடுத்ததை மறக்க முடியாது.

சுதர்சனம் இசையில்

1)எல்லோரும் வாழ வேண்டும் எம்.எல்.வி., டி எஸ் பகவதி பாடினர்
2)காகாகா (சி எஸ் ஜெயராம்)
3)நெஞ்சு பொறுக்குதிலையே (பாரதியார் பாடல் பாடியவர் ஜெயராமன்)
4)ஓ ரசிக்கும் சீமானே (எம் எஸ் ராஜேஸ்வரி)
5)பெண்ணே ஒரு தொல்லையா (டி எஸ் பகவதி)
6) நேசம் ஞானம் (பாரதிதாசன் பாடல் ஜெயராமன் பாடினார்)
7) கொஞ்சும் மொழி (டி எஸ் பகவதி)
8)பூமாலை நேயேன் (டி எஸ் பகவதி)
9) புது பெண்ணின் மனசைத் தொட்டு(டி எஸ் பகவதி)

முதல் பாடலும் நான்காவது பாடலும்  கடைசி பாடலும் அண்னல்தாங்கே என்பவர் எழுதினார்
2,5,7.8 படல்களை எழுதியவர் உடுமலை நாராயணகவி