Friday, October 28, 2016

கலைஞர் எனும் கலைஞன் - 1

கலைஞர் என்னும் கலைஞன் - 1

தமிழ்த்திரையில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு சிலரே!

அவர்களில் கலைஞரும் ஒருவர்.கிட்டத்தட்ட 70 படங்களில் அவர் பணியாற்றியிருக்கிறார்.கதை,திரைக்கதை,வசனம் இருபது படங்களுக்கு எழுதி இருக்கிறார்.கதை,திரைக்கதை இரு படங்களுக்கு எழுதி இருக்கிறார். திரைக்கதை,வசனம் முப்பத்தி மூன்று படங்களுக்கு எழுதி இருக்கிறார்.நான்கு படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.பதினெட்டு படங்களில் பாடல் எழுதியுள்ளார்.

எனக்குத் தெரிந்த அளவில்..அப்படங்கள் பற்றி எழுத உள்ளேன்.இது ஒரு திரைக்கலைஞன்  பற்றிய பதிவு.அதனால்..அரசியல் சம்பந்தப்பட்ட பின்னூட்டங்களை தவிர்க்கவும்..

1924ல் பிறந்த கலைஞர் வசனத்தில் வந்த முதல் படம் 1947ல்..அதாவது அவரின் 23ஆம் வயதில் வந்த படம் ராஜகுமாரி
இப்படத்தில் எம் ஜி ஆர்., மாலதி, பாலையா,நம்பியார் நடித்துள்ளனர்/ஏ எஸ் ஏ சாமி இயக்கம்.எம்  ஜி ஆரின் 15ஆவது படம்.அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இப்படத்தில் சின்னப்ப தேவருக்கு சிறு வேடம் கொடுக்கப்பட்டது.ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு

1948ல் அபிமன்யூ படம்.
இப்புராணப் படத்தில் சாமார்த்தியமாக அரசியல் வசனங்களை எழுதினார் கலைஞர்.படம் முடிந்ததும் தியேட்டரில் மனைவியுடன் படம் பார்க்கப் போனவருக்கு அதிர்ச்சி, வருத்தம்.டைட்டிலில் வசனம் என இயக்குநர் பெயரே இருந்தது (பின்னர் வந்த படங்களில், படத்த்லைப்பிற்குப் பின் வசனம் கருணாநிதி எனப் பெயர் வர ஆரம்பித்தது.இதுவே கலைஞர் பேனாவின் வலிமை)

அபிமன்யூவில் கலைஞரின் சில வசனங்கள்

"ஒடிந்த வாளானாலும் ஒரு வாள் கொடுங்கள்
"அண்ணன் செய்த முடிவை கண்ணன் மாற்றுவதற்கில்லை" "கண்ணன் மனமும் கல்லா"
"அர்ச்சுனனால் துளைக்க முடியாத சக்கரவியுகத்தை அபிமன்யூ துளைத்து விட்டானென்றால் அங்கேதான் இருக்கிறது ஆச்சாரியாரின் விபீஷண மூளை

1950ல் மருத நாட்டு இளவரசி..எம்.ஜி.ஆர்., ஜானகி நடித்தது..

. இதில் எம்.ஜி.ஆரின் சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா, சி.கே.சரஸ்வதி ஆகியோரும் நடித்தனர்.
கதை-வசனத்தை மு.கருணாநிதி எழுத ஏ.காசிலிங்கம் டைரக்ட் செய்தார்.
இந்தப் படத்தில் வி.என். ஜானகி மருதநாட்டின் இளவரசி. அவர், சாதாரண இளைஞனான எம்.ஜி.ஆரை காதலிப்பார். அவர் இளவரசி என்று எம்.ஜி.ஆருக்குத் தெரியாது. அதனால் அவரும் காதலிப்பார். எம்.ஜி.ஆருக்கு கத்திச்சண்டை கற்றுத்தருவார், ஜானகி!
மருதநாட்டு அரசரை பதவியில் இருந்து இறக்க அவரது இளைய மனைவியின் சகோதரன் (மைத்துனன்) திட்டம் தீட்டுவான். அதை எம்.ஜி.ஆரும், ஜானகியும் சேர்ந்து முறியடிப்பதே இப்படத்தின் மூலக்கதை.
இந்தப் படத்தில், எம்.ஜி.ஆர். ஒரு வேட்டி மட்டும் அணிந்து சாதாரண குடிமகனாக நடிப்பார். படம் முழுவதும் இந்த ஒரே உடைதான்! கருணாநிதியின் வசனம் அருமையாக அமைந்தது. எம்.ஜி.ஆரும், ஜானகியும் சிறப்பாக நடித்திருந்தனர். எம்.ஜி.ஆரின் கத்திச்சண்டைகள் ரசிகர்களைக் கவர்ந்தன. படம் அமோக வெற்றி பெற்றது

1950ல் வந்த இன்னொரு படம் மந்திரிகுமாரி..இப்படத்தில்..'என் எருமைக் கன்னுக்குட்டி'என்ற பாடலும் எழுதி..பாடலாசிரியர் ஆனார் கருணாநிதி

ஐம்பெரும் காவியங்களில் ஒன்றான “குண்டலகேசி”யில் வரும் ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து, “மந்திரிகுமாரி” என்ற நாடகத்தை கருணாநிதி உருவாக்கியிருந்தார். ஏற்கனவே மேடையில் வெற்றி பெற்ற அந்த நாடகத்தை திரைப்படமாகத் தயாரிக்க  மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் நினைத்தார்

திரைக்கதையை அமைத்து, வசனத்தை எழுதித் தரும்படி கருணாநிதியிடம் சுந்தரம் கேட்டுக்கொண்டார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்று, வசனம் எழுதத் தொடங்கினார் கருணாநிதி.

மந்திரிகுமாரியின் கதாநாயகனாக யாரைப் போடுவது என்று சுந்தரம் யோசித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே கருணாநிதி வசனம் எழுதிய ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருந்ததால், அவருக்கும், கருணாநிதிக்கும் நெருங்கிய நட்புறவு ஏற்பட்டிருந்தது. எனவே, கதாநாயகன் வேடத்துக்கு எம்.ஜி.ஆரை கருணாநிதி பலமாக சிபாரிசு செய்தார்.

“ராஜகுமாரி” படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்திருந்தாலும், தொடர்ந்து அவருக்கு கதாநாயகன் வேடம் கிடைக்கவில்லை. சுந்தரமும் உடனடியாக அவரை கதாநாயகனாகத் தேர்வு செய்யாமல், “அவருக்கு தாடையில் பெரிய குழி இருக்கிறதே” என்றார். “அங்கு சிறிய தாடியை ஒட்ட வைத்து விட்டால் சரியாகிவிடும். தளபதி வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார். சண்டைக் காட்சிகளில் பிரமாதமாக நடிப்பார்” என்று கருணாநிதி எடுத்துக் கூறினார். அதன்பின் எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்தார் சுந்தரம்.

மந்திரிகுமாரியில் வில்லன் வேடம் முக்கியமானது. அதற்கு நாடக நடிகர் எஸ்.ஏ.நடராஜன் தேர்வு செய்யப்பட்டார். மற்றும் ராஜகுமாரி வேடத்துக்கு ஜி.சகுந்தலா, மந்திரிகுமாரி வேடத்துக்கு மாதுரிதேவி, ராஜகுரு வேடத்துக்கு எம்.என். நம்பியார் ஒப்பந்தமானார்கள்.

“மந்திரி குமாரி”யின் கதை, திருப்பங்கள் நிறைந்தது.  முல்லை நாட்டு மன்னரின் மகள் ஜீவரேகவும் (ஜி.சகுந்தலா) மந்திரியின் மகள் அமுதாவும் (மாதுரிதேவி) ஆருயிர் தோழிகள். தளபதி வீரமோகனை ராஜகுமாரி காதலிக்கிறாள்.

மன்னரை ஆட்டிப்படைக்கும் ராஜகுருவின் (எம்.என்.நம்பியார்) மகன் பார்த்திபன் (எஸ்.ஏ.நடராஜன்) கொடூரமானவன். பகலில் ராஜகுருவின் மகன். இரவில் பயங்கர கொள்ளைக்காரன். “கொள்ளையடிப்பது ஒரு கலை” என்பது அவன் கொள்கை.

மந்திரிகுமாரி அமுதாவைக் கண்டதும் அவளை அடையத்துடிக்கிறான். அவனுடைய சுயரூபத்தை அறியாத அவள், அவனை மணக்கிறாள். கொள்ளைக் கூட்டத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் தளபதி ராஜமோகன் ஈடுபட்டு, பார்த்திபனை பிடித்து அரசவையின் முன் நிறுத்துகிறான். ஆனால் ராஜகுருவின் சூழ்ச்சியால் பழி ராஜமோகன் மீது விழுகிறது.

தன் கணவன் கொடியவன் _ கொள்ளைக்காரன் என்பதை, அமுதா அறிந்து கொள்கிறாள். அவனைத் திருத்த முயல்கிறாள். உண்மையை அறிந்து கொண்டு விட்டாளே என்ற ஆத்திரத்தில், அவளைத் தீர்த்துக்கட்ட பார்த்திபன் முடிவு செய்கிறான்.

“வாராய் நீ வாராய்” என்று பாட்டுப்பாடி, அவளை மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கிருந்து அவளைத் தள்ளிவிட அவன் முயற்சி செய்யும்போது, “சாவதற்கு முன் உங்களை மூன்று முறை சுற்றி வந்து வணங்க அனுமதியுங்கள்” என்று வேண்டுகிறாள், அமுதா.

அதற்கு அவன் சம்மதிக்கிறான். மூன்றாவது முறை சுற்றி வரும் போது, அவனை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விடுகிறாள். அவள் மூலம், உண்மையை அறிகிறார், அரசர். ராஜகுரு சிறைப்படுத்தப்படுகிறார். அரசகுமாரியும், தளபதியும் ஒன்று சேருகின்றனர்.

 கதை, வசனம், நடிப்பு, இசை எல்லாமே இதில் சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக, கருணாநிதியின் வசனங்கள் கூர்மையாக அமைந்திருந்தன. “அனல் பறக்கும் வசனம்; கனல் தெறிக்கும் நடிப்பு” என்று விளம்பரம் செய்தார்கள்.

நம்பியாருக்கும், எஸ்.ஏ.நடராஜனுக்கும் இடையே நடைபெறும் ஒரு உரையாடல்:

“பார்த்திபா! நீ கொள்ளையடிப்பதை விட்டுவிடக் கூடாதா?”

“கொள்ளை அடிப்பதை விட்டு விடுவதா? அது கலையப்பா, கலை!”

“என்ன! கொள்ளையடிப்பது கலையா?”

“ஆம் தந்தையே! அது கலைதான். வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!”

“இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?”

“கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.” இத்தகையை வசனங்கள் ஏராளம்.

“கொள்ளை அடிப்பதை கலை என்று கருணாநிதி கூறுகிறார்” என்று மாற்றுக் கட்சியினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

அதற்குக் கருணாநிதி கூறிய பதில்: “கொள்ளை அடிப்பதும் ஒரு கலை என்று, அப்படத்தில் தீயவன் ஒருவன்தான் கூறுகிறான். கடைசியில் அவன் அழிந்து போகிறான். ராமாயணத்தை எழுதியவர், கூனி பாத்திரத்தையும் படைத்தாரே, கூனியின் சுபாவம் அதை எழுதியவருக்கு சொந்தமானதா? மகாபாரதத்தை எழுதியவர், சகுனி பாத்திரத்தைப் படைத்தாரே. அப்படியானால் அவர் சகுனியின் செய்கைகளை ஆதரிப்பதாக அர்த்தமா?”

_ இவ்வாறு எதிர்ப்பாளர்களுக்குப் பதில் அளித்தார், கருணாநிதி.

1951ல் தேவகி..கலைஞரின் அருமையான வசனங்கள்..
இப்படத்தில் வரும் ஒரு வசனம்
பெரியம்மா குத்துவிளக்கு
சின்னம்மா எலெக்டிரிக் விளக்கு
இப்படத்திற்கு ஜி.ராமநாதன் இசை அமைத்துள்ளார்

1951 மணமகள் இப்படத் தயாரிப்பாளர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆவார்.திரைக்கதை கலைஞர்.எஸ்.வி.சகஸ்ரநாமம்,என்.எஸ்.கே.,லலிதா,பத்மினி ,   பாலையா ஆகியோர் நடித்தனர்.இப்படத்தில் எஸ் எஸ் ஆர் பிச்சைக்காரனாக நடித்தார்.அவர் நடித்த முதல் படம்.ஆனால், தணிக்கையதிகாரிகளால் அவர் பேசிய வசனங்கள் வெட்டப்பட்ட போது அவரது பாத்திரமும் படத்தில் இல்லை.ஆனாலும், டைடிலில் அறிமுகம் எஸ் எஸ் ஆர்.,எனக் காட்டப்பட்டது

கணவரின் கொடுமையைத் தாங்க முடியாத கதாநாயகி மனைவியாக விரும்பாமல் மணமகளாகவே இருக்கும் கதையாகும்.
இனி அடுத்த பதிவில்..

No comments:

Post a Comment