பிள்ளையோ பிள்ளை - 30
1970ல் எங்கள் தங்கம் வெளிவந்த பின்னர், சிறிது சிறிதாய் எம் ஜி ஆர்., கருணாநிதி இடையே உறவில் சிறிய சிறிய விரிசல்கள் ஏற்படலாயிற்று.கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் சார்பில், முரசொலி மாறன் எடுத்த "எங்கள் தங்கம்" படத்திற்குப் பின், இனி படங்களே தயாரிக்கப் போவதில்லை என்று மாறன் சலிப்புடன் கூறினார்
1972ல் எம் ஜி ஆருக்கு மாற்றாக கலைஞரின் மகன் மு க முத்துவை கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் கலைஞர்.முத்துவும் எம் ஜி ஆர் பாணியிலேயே நடிக்க ஆரம்பித்தார்.சொந்தக் குரலிலும் பாடினார்
1972ல் அவர் நடித்து கலைஞர் கதை, வசனத்தில் அஞ்சுகம் பிக்சர்ஸ் சார்பில் முரசொலி செல்வம் தயாரிக்க, கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வந்த படம் பிள்ளையோ பிள்ளை.
கலைத்தாயின் பொன்மகுடத்தில் புது முத்து, கலைஞரின் செல்வன் முத்து நடிக்கும் கலைஞரின் கருத்தோவியம் என டைடிலில் காட்டப்பட்டது
"உயர்ந்த இடத்தில் பிறந்தவன் நான்...ஓய்வு இல்லாமல் உழைப்பவன் நான்..துயர் வந்தாலும் தீர்ப்பவன் நான்..தொடர்ந்து முன்னேறத் துடிப்பவன் நான்" என டி எம் சௌந்தரராஜன் பாட, எம் எஸ் விஸ்வநாதன் இசையமைக்க அறிமுகமானார் முத்து.
கங்காதரன் ஒரு சமுக விரோதி.சிலை கடத்துபவன்.அவன் தன் மனைவியைக் கொன்றுவிட்டு அந்தப் பழியை தன் வேலைக்காரன் முருகன் மீது போட்டு அவனை சிறைக்கு அனுப்புகிறான்.முருகன் சிறையிலிருந்து தப்பி, கங்காதரன் மகனை கடத்திவிடுகிறான்.இதனிடையே கங்காதரன், காஞ்சனா என்ற பெண்ணை மணக்கிறான்.அவளையும் முருகன் கடத்த, அவள் கருவுற்று இருப்பதை அறிந்தவன் அவளை விடுவிக்கிறான்.அவளுக்கு ஒரு ஆண் மகவு பிறக்கிறது.
முருகன் வளர்க்கும் மகன் குமார் ஒரு மருத்துவர் ஆகிறான்.கங்காதரனுக்கு பிறந்த அடுத்த மகன் கண்ணன், ஒரு நேர்மையானவனாகவும், கடின உழைப்பாளியும் ஆகிறான்.
இதனிடையே, அரசு வழக்கறிஞர் ஒருவரின் மகள் அவர்களில் ஒருவனுடன் காதல் வயப்படுகிறாள்.கண்ணனும், குமாரும் ஒரே மாதிரி இருப்பதால் அவளுக்குக் குழப்பம் ஏற்படுகிறது.
அது எப்படி முடிகிறது.கங்காதரன் என்ன ஆனான்.அவனுக்கு குமார் தன் மகன் எனத் தெரிந்ததா என்பதே மீதிக் கதையாகும்
கண்ணனாகவும், குமாராகவும், முத்து தன் முதல் படத்திலேயே இரு வேடங்களில் நடித்தார்.
தவிர்த்து, கங்காதரனாக ஆர் எஸ் மனோகர், காஞ்சனாவாக விஜயகுமாரி, முருகனாக எம் ஆர் ஆர் வாசு நடித்தனர்.லட்சுமி கதாநாயகியாக நடித்தார்
உபரி தகவல்
----------------------
இப்படத்தில் வாலி எழுதிய "மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ..நீ மூவேந்தர் வழி வந்த மன்னவரோ" என்ற பாடலும் உண்டு.ஒருநாள் எம் ஜி ஆர்., வாலியுடன் காலை உணவு அருந்தியபடியே,"வாலி நீங்கள் இப்படி பாட்டு எழுதியது சரியா" மூன்று தமிழ் முத்துவிடம்தான் தோன்றியதா? என்று கேட்டு வருத்தப்பட்டாராம்.வாலி கூறிய, அதற்குரிய பதில் எதையும் அவர் ஏற்கவில்லையாம்